பெரம்பலூர், அரியலூரில் கொட்டிய கனமழை: மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியதால், மருதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை கொட்டியது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த மேலமாத்தூர், கீழமாத்தூர், ராமலிங்கபுரம், அருணகிரிமங்கலம், ரகலாபுரம், கல்லுப்பட்டி மற்றும் அரியலூர் நகரம், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீரென பலத்த மழை கொட்டியது. 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த இந்த பகுதி வெள்ளக்காடானது. மழைநீர் முழுவதும் காட்டாறுகள் வழியாக மருதையாற்றில் பாய்ந்தது.  அரியலூரில் 91 மி.மீ மழை பதிவானது. அதே நேரத்தில் பெரம்பலூர் நகரில் 4 மி.மீ. மழை தான் பதிவானது.

திடீர் கனமழை காரணமாக மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு பின்னர் மருதையாற்றில் திடீரென வெள்ளம் வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வெள்ளம் அரியலூர் மாவட்டம் வழியாக முட்டுவாஞ்சேரி சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. மருதையாற்றில் மாலையில் பாய்ந்த வெள்ளம் இரவிலேயே வடிந்து போனது. நாகை மாவட்டத்திலும் பரவலாக லேசான மழை பெய்தது. நாகை நகரில் இரவு 7 மணி முதல் அரை மணி நேரம் மழை தூறியது.