உபேர், ஒலா வால் வாகன விற்பனைக் குறைவா? : நிதி அமைச்சருக்கு மாருதி நிறுவனம் மறுப்பு

டில்லி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாகன விற்பனைக் குறைவு குறித்த கருத்துக்கு மாருதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தி விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.    கடந்த மாதத்தில் வரலாறு காணாத அளவுக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது.   பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 41.09%  அதாவது 115,977 வாகனங்கள் குறைந்துள்ளன.   கடந்த 1997-98 முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது மிகவும் அதிகமாகும்.   இதே நிலையில் லாரிகள், பஸ்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும் சரிந்துள்ளன.

ஷஷாங்க் ஸ்ரீவத்சா

இந்த சரிவு குறித்து நிர்மலா சீதாராமன் தனது செய்தியாளர்கள் சந்திப்பில், “தற்போது மக்களிடையே புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் குறைந்துள்ளது.   குறிப்பாக இளைஞர்கள் மாத தவணை கட்டி வாகனம் வாங்குவதை விட உபேர் மற்றும் ஓலா  போன்ற வாடகைக்கார் நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர்.   இதனால் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது” எனக் கூறினார்.

இது குறித்து மாருதி கார் உற்பத்தி நிறுவன செயல் இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவத்சா, “வாகன விற்பனைச் சரிவு கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.    இதற்கு நிதி அமைச்சர் கூறும் காரணம் ஒப்புக் கொள்ள முடியாதபடி உள்ளது.  ஓலா மற்றும் உபேர் வாடகை வாகனச் சேவை சுமார் 6-7 வருடங்களாக நாட்டில் உள்ளது.  அப்போது வாகன விற்பனையில் எவ்வித தொய்வும் இல்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாகச் சிறிது சிறிதாக வாகன விற்பனை குறைந்து வருகிறது   அலுவலகங்களுக்குச் செல்ல அமைச்சர் கூறியது போல வாடகை வாகனம் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் இருக்கலாம்.   ஆனால் அவர்கள் குடும்பத்துடன் செல்ல மற்றும் வார இறுதி சுற்றுப்பயணங்களுக்குச் சொந்த வாகனத்தைத் தான் விரும்புவார்கள்.” என மறுப்பு தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Automobile sales down, Lowest, Maruti denied, Nirmala Sitharaman, Uber and ola
-=-