சிறைப்பறவையான தோழரின் தங்கை திருமணத்தை சொந்தசெலவில் நடத்திய நண்பர்கள்

டில்லி,

போராட்டத்தால் சிறைபட்டிருக்கும் சகதோழரின் சகோதரி திருமணத்தை தொழிற்சாலை நண்பர்கள் சொந்தசெலவில் கோலாகலமாக நடத்திக்காட்டி மனம் நெகிழவைத்தனர்.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி கார் நிறுவனத்தின் நிர்வாகத்தை  கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது வன்முறை வெடித்து கம்பெனியின் பொதுமேலாளர் அவனிஷ்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து 13 பேருக்கு ஆயுள்தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயுள்தண்டனை கைதிகளில் ஒருவர்தான் சந்தீப் தில்லான்.

இவரது சகோதரிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் வறுமையான நிலையில் இருந்த சந்தீப்பின் தந்தையால் திருமணத்தை நடத்திவைக்கமுடியாத சூழலில் இருந்தார். மார்ச் 26 ம் தேதி  திருமண நாள் என்பதால் அதில் கலந்துகொள்ள சந்தீப் சிறைத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் சந்தீப்புடன் பணியாற்றிய தொழிற்சாலை தோழர்கள் அவரது சகோதரி திருமணத்தை நடத்திவைக்க முடிவெடுத்தனர்.

தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களிடமும்  திருமண நிதியாக ரூ.9 லட்சத்தை  வசூலித்து சந்தீப்பின் அப்பாவிடம் அளித்தனர். அரியானா மாநிலம் ஜின்ட் மாவட்டத்தில் உள்ள சாத்தார் கிராமத்தில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே 9 லட்சம் ரூபாயை  சந்தீப்பின் தந்தையிடம் கொடுத்து அவரது மனதை நெகிழவைத்தனர்.