செங்கல்பட்டு

பிரதமர் மோடியின் பிடியில் சிக்கி உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீது தேர்தல் நன்னடத்தை விதி மீறல் குரித்து ஏராளமான புகார்கள் எழுந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் பல புகார்களை நிராகரித்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

செங்கல்பட்டு நகரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவசா தேர்தல் ஆணைய செயல்பாட்டையும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் செயல்பாட்டையும் கடுமையாக கண்டித்துள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுவதில்லை எனவும் லாவசா கூறி உள்ளார்.

இதன் மூலம் மோடியின் கையில் தேர்தல் ஆணையம் சிக்கி உள்ளது தெரிய வருகிறது.இம்முறை தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலை மோடியின் ஆணைப்படி நடத்தி உள்ளது. இந்த தேர்தல் முறையே தற்போது கேள்விக்கு இடமாகி உள்ளது. மோடியின் கைப்பிடியில் சிக்கி இயங்கி வரும் இந்த தேர்தல் ஆணயத்தை கலைக்க வேண்டும். அதற்கான சட்ட விதிமுறைகள் குறித்து ஆராய வேண்டும்.

தற்போது தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் பிரச்னைகளை முறையிட ஆட்கள் இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர். மாநிலம் முழுவதுமே கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் அரசு இது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் உள்ளது. இந்த அரசு எதற்கு எடுத்தாலும் தேர்தலை காரணம் காட்டி தப்பி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.