திருவனந்தபுரம்

கேரள வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் கட்சி பல புதிய திருத்தப்பட்ட நடவடிக்கை எடுக்க திட்டங்களைத் தீட்டி உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் தோல்வியைச் சந்தித்தது.   இம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக விளங்கிய போதிலும் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தது கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்  பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   இது குறித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் கொண்ட குழு சென்ற வாரம் 4 நாள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

,கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலர் கொடியேரி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் காங்கிரஸ் கூட்டணி மட்டுமின்றி பாஜகவும் கடும் போட்டியை அளித்துள்ளது.    பாஜகவுக்கு மத்திய அரசும்  கேரளாவில் உள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பும் மிகவும் உதவி புரிந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தற்போது பொதுமக்கள் ஆதரவு குறைந்துள்ளது.  கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 48% வாக்குகளைப் பெற்றது.   அது படிப்படியாகக் குறைந்து தற்போதைய மக்களவை தேர்தலில் 35% ஆகி உள்ளது.  சரிந்து போன இந்த மக்கள் ஆதரவை  மீண்டும் பெறத் தேவையான திருத்தப்பட்ட நடவடிக்கைகளைக் கட்சி எடுக்க உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல அனுமதி அளித்தது மாநிலத்தின் பல பகுதிகளில் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.   காங்கிரஸ் மற்றும் பாஜக இதையொட்டி மக்களுடைய நம்பிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கடி நடப்பதாக பிரசாரம் செய்தது.  இந்தக் கட்சி மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல்ல என்பதை விளக்கும் வகையில் கட்சியின்  தொண்டர்களும் ஆதரவாளர்களும் நடந்துக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.