ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள மேரிகோம்..!

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிப‍ெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வரும் மே 21 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்கிறார்.

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரைப் பொறுத்தவரை, மேரிகோம் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். அவற்றுள் 5 தங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு, இத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிகோம் 51கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளார். சமீபத்தில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில், இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற பிறகு, இவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

மேரிகோம் உடன், ஆசிய தொடரில் பங்கேற்கவுள்ள மற்றொரு முக்கிய வீராங்கனை லவ்லினா போரோஹெய்ன். 69 கிலோ எடைப்பிரிவில் இடம்பெற்றுள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உலகப் போட்டியில் இரண்டுமுறை வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‍இவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.