பெய்ஜிங்: கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவின் வூஹான் நகரில் வாழும் 1 கோடியே 10 லட்சம் பேர்களையும் அடுத்த 10 நாட்களில் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அந்நகரத்தின் கொரோனா வைரஸ் பணிக்குழுவிடமிருந்து உத்தரவுகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரு மாதத்திற்கு பின்னர், வூஹான் நகரத்தில் புதிதாக 6 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்தப் புதிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக தொற்று ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் சீனாவில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், சீனாவில் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் பரவலாக எடுக்கப்பட்டு வருவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு, அந்நாட்டின் பொழுதுபோக்கு பகுதிகள் திறந்துவிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்தப் புதிய பரிசோதனை உத்தரவானது, அந்நகர அதிகாரிகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.