பணி  நீக்கத்தை எதிர்த்து பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

பெங்களூரு:

பணி நீக்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்காகன ஐடி ஊழியர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் ஏற்கனவே வேலை இழந்த பலரும் கலந்துகொண்டனர்.

‘‘பல நிறுவனங்கள் சட்டவிரோத பணி நீக்கத்தை கடைபிடிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்ப இழப்பீடை பணியாளர்களுக்கு பெற்றுத் தர வேண்டும். கடந்த ஒரு ஆண்டில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை வேலை இழந்துள்ளனர்’’ என்று தகவல் தொழில்நுட்ப பணியாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பணியாளர் கூறுகையில்,‘‘ என்னை பணியில் இருந்து விலக சொல்லி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவினர் போன் செய்து வருகின்றனர்’’ என்றார்.

ஆயிரக்கணக்கான வல்லுனர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி இழந்துள்ளனர். மேலும் 6 ஆயிரம் பேர் பணி இழக்கும் சூழல் நிலவுகிறது. அதனால் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

சட்ட விரோத பணி நீக்கத்தை நிறுத்த வேண்டும். கட்டாயமாக தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். குறைதீர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

கோரிக்கை மனுவை தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்களை சந்தித்து அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உதவிகள் செய்யப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப் நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, கோக்னிசன்ட், டெக் மகிந்திரா போன்ற நிறுவனங்களில் பணி நீக்கம் தொடர்வதால் ஐடி துறை முடங்கியுள்ளது. இதேபோல் புனே, ஐதராபாத்த்திலும் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர்கள் மாநில அரசின் உதவியை நாடியுள்ளனர்.