சென்னை: பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் மாஸ்டர் படம் திரையிடப்பட்டுள்ள நிலையில்,  சென்னை காசி தியேட்டரில் கொரோனா நெறிமுறைகளை மீறி 100 சதவிகித இருக்கை அனுமதிக்கப்பட்டது. இது சர்ச்சையான  நிலையில், காசி தியேட்டருக்கு ரூ.5000  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கை அனுமதிக்கப்பட்டது. கொரோனா தொற்றும் இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில், அரசு அனுமதி அளித்த விவகாரம் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இதையடுத்து, 100% இருக்கை அனுமதியை ரத்து செய்தது. 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், அரசின் கொரோனா நெறிமுறைகளை மீறி பல தியேட்டர்களில் 100 சதிவிகித இருக்கை அனுமதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னை காசி தியேட்டரில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக 100 சதவிகித இருக்கை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், அங்கு விரைந்த அதிகாரிகள்,  விதி 188 , 269ன் கீழ்  காசி தியேட்டருக்கு ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர்.

ரசிகர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணமாக லட்ச ரூபாய்க்கு மேல் கல்லா கட்டிய தியேட்டருக்கு வெறும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.