‘மாஸ்டர்’ Vs ’சுல்தான்’ 2021 பொங்கல் வெளியீடு….!

கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கு மேலாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. மத்திய, மாநில அரசுகள் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்ததை அடுத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும் மத்திய அரசு அனுமதியால் நவம்பர் மாதத்தில்தான் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளது. அப்படித் திறக்கப்பட்டாலும், 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ‘மாஸ்டர்’ வெளியீடு எனப் படக்குழு முடிவு செய்துள்ளது.

கார்த்தியின் சுல்தான் படமும் பொங்கலுக்கு வெளியிட தயாராயிருக்கிறது .’சுல்தான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ”படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நல்லதொரு பண்டிகை வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘மாஸ்டர்’ மற்றும் ‘சுல்தான்’ ஆகிய படங்கள் 2021-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக, 2019-ம் ஆண்டு ‘பிகில்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான ‘கைதி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு எதிராக ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.