கொரோனா தொற்று தீவிரமான இந்த ஏப்ரல் – மே மாதத்தில் ஐந்தில் நான்கு கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் டெலிவரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கினால், தனியார் மருத்துவமனைகளும், சிறு கிளினிக்களும் திறக்கப்படா ததும், அப்படி திறந்திருக்கும் பிரசவ மருத்துவமனைகளும் அங்கு வரும் கர்ப்பிணி களை அரசு மருத்துவமனைகளுக்கு ,அனுப்பி வைப்பதும் முக்கிய காரணமாக அறியப்படுகிறது. கடந்த வருடம் இதே நேரம் 63% இருந்த அரசு மருத்துவமனை பிரசவம் இந்த வருடம் 83%-மாக உயர்ந்துள்ளது.

“பொதுவாக 40%-க்கும் அதிகமான பெண்கள் பிரசவத்திற்கு தனியார் மருத்துவ மனைகளையே பெரிதும் விரும்புவார்கள். ஆனால் இந்த கொரோனா கால கட்டத்தில் பெருவாரியான தனியார் மருத்துவமனைகள் செயல்படாததும், அப்படி செயல்படும் பெரிய, கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் கட்டணங்கள் தாங்க முடியாத அளவு இருப்பதும் தான் அரசு மருத்துவமனைகளை தேடி போக வைச்சிருக்கு” என்கிறார் NHM மிஷன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில் ராஜ்.

ஆனால் தனியார் மருத்துவமனைகளிலோ வரும் கர்ப்பிணிகளை அதிக நேரம் வைத்திருக்க விருப்பமின்றி அட்மிட் ஆனவுடன் அவசர அவசரமாக சிசேரியன் செய்து அனுப்பி வைக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனராம். மேலும் கட்டணங்களையும் அதிர்ச்சியூட்டும் வகையில் திடீரென உயர்த்தியுள்ளார்களாம்.

“ஆரம்பித்தில கார்ப்பொரேட் இன்சூரன்ஸ்ல பேக்கேஜ் சார்ஜ் 1.5 லட்சம் ஆகும்னு சொன்னாங்க. ஆனா இப்போ திடீர்னு 2.3 லட்சம் கட்டணும். அதும் இன்சூரன்ஸ்ல கவர் ஆகாதுனுறாங்க. கேட்டா கொரோனாவை காரணம் காட்றாங்க. கடைசில இங்க வந்துட்டேன் ” என்கிறார் எக்மோர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தனது குழந்தையை பிரசவித்த 24 வயது ஐடி ஊழியர்.

இந்த கடுமையான சூழலிலும் பெரிய தனியார் மருத்துவமனைகள் பணம் ஈட்டுவதை மட்டுமே தலையாய கடமையாக செய்து வருவது வேதனையான விசயம்.

– லெட்சுமி பிரியா