Random image

கேரளா: மாத்ருபூமி செய்தி ஆசிரியர், அவரது மனைவியை தாக்கி கொள்ளை

திருவனந்தபுரம்:

கேரளாவில் மாத்ருபூமி பத்திரிக்கை செய்தி ஆசிரியர், அவரது மனைவியையும் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாத்ருபூமி செய்தி ஆசிரியராக பணியாற்றி வருபவர் வினோத் சந்திரன். இவர் கண்ணூர் தாழேசோவா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த 4 கொள்ளையர்கள் வினோத் சந்திரனையும், அவரது மனைவியையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கண்ணூர் வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீபன் கண்ணிப்போயில் கூறுகையில்,‘‘இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் நடந்துள்ளது. கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு வினோத்தும், அவரது மனைவி சரிதாவும் அறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

அப்போது இருவரையும் கொள்ளையர் பிடித்து கை, வாய், கண்களை கட்டி பயங்கரமாக தாக்கியுள்ளனர். ஒரு மணி நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். ஏடிஎம் கார்டுகள், லேப் டாப், செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றவுடன் வினோத் கை கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு உதவி கோரியுள்ளார். போலீசார் விரைந்து சென்று இருவரையும் ஏகேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். கொள்ளையர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தம்பதியர் கூறிய அடையாளங்களை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. டிஎஸ்பி சதானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.