சென்னை:
சென்னை தி.நகரை சேர்ந்த சேகர்ரெட்டி வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இது குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை முத்துப்பட்டிணத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கேட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலட்சுமி சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டிசம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.