புதுடெல்லி: மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கக்கூடிய மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகபட்சம் ரூ.10 லட்சம் என்ற அளவாக நிர்ணயம் செய்ய வேண்டுமென பொதுக் காப்பீட்டு கவுன்சில் கோரியுள்ளது.

மேலும், சாலைப் போக்குவரத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்த நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மோட்டார் வாகன விபத்துக்களில் வழங்கப்படும் மூன்றாம் நபர் இழப்பீட்டுத் தொகை மற்றும் அடிப்படை பிரீமியம் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதன்பொருட்டு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டுமென 2019ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது.

தற்போதைய நடைமுறையின்படி, மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகைக்கான அதிகபட்ச நிர்ணயம் என்று எதுவும் இல்லை. நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நிர்ணயிக்கும் தொகையே இழப்பீடாக கொடுக்கப்படுகின்றன.

இதன்மூலம், காப்பீட்டு நிறுவனங்கள் பல சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அதிகபட்சத் தொகையாக ரூ.10 லட்சம் என்பதை நிர்ணயித்து அதை மட்டும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டுமெனவும், மீதி தொகையை சாலைப் போக்குவரத்து நிதியத்தின் மூலம் வழங்க வேண்டுமெனவும் தற்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.