தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிகபட்சம் ரூ.4500 – நிர்ணயித்த மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிகபட்சமாக ரூ.4500 வசூலிக்கலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்கின்றனர். தற்போது அரசு மருத்துவமனை ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நாடுமுழுவதும் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களை அமைத்து கொரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்தப் பரிசோதனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் எனவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4,500 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட சோதனைக்கு ரூ.1,500ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ.3000ம் வசூலிக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இலவசமாகவோ அல்லது நிர்ணயித்த அளவைவிடக் குறைந்த கட்டணத்திலோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், ரத்த மாதிரிகளை பெற்ற நபர்களின் விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.