ந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது,  1974ம் ஆண்டு மே 18ந்தேதியான, இதே தினத்தில்  உலக நாடுகளை மிரள வைத்த ‘சிரிக்கும் புத்தர்’ அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமையில் இந்தியாவை மிரட்டி வந்த வேளையில், அவர்களை அச்சுறுத்தும் விதமாக, முதன்முதலாக தனது வல்லமையை உலகுக்கு பறைசாற்றியது இந்தியா.


இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும்  முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் விடாமுயற்சியின் காரணமாக, ‘சிரிக்கும் புத்தர்’ எனப் பெயரிடப்பட்ட முதல் அணுகுண்டு சோதனை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாவலைவனப் பகுதியான பொக்ரான் எனும் இடத்தில் ரகசியமாக, அணு வெடிப்பு சோதனை முயற்சி , 18 மே 1974 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
‘அணுசக்தி அமைதிக்காகவே’ என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இருந்தாலும் உலக நாடுகளின் ஏளனப்பார்வைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பொக்ரான் அணுகுண்டு சோதமன நடத்தப்பட்டது. இது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

அணு ஆயுதம், தனது பிறப்புரிமை என்ற எண்ணத்தில் இருந்த அமெரிக்கா மற்றும் அமைதி விரும்புவதாக கூறும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் அணு குண்டு சோதனையை பார்த்து பிரமித்து நின்றன.

இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஹோமி சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை ரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது. இக்குழுவின் தலைவராக டாகடர் ராஜா ராமண்ணா செயல்பட்டார். இக்குழுவில் டாக்டர் பி. கே. ஐயங்கார், டாக்டர் ராஜகோபால சிதம்பரம், டாக்டர் நாகப்பட்டினம் சாம்பசிவ வேங்கடேசன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் வாமன் தத்தாத்ரேய பட்வர்தன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர். ஒட்டு மொத்தமாக 75 அறிவியலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் மட்டுமே இதில் குறைந்த அளவில் இத்திட்டத்தில் செயல் பட்டனர். இந்தக் காரணங்களால், இந்த திட்டத்தை இரகசியமாகவே வைத்து நிறைவேற்ற முடிந்தது.
அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்புக் கருவியின் அடிப்படையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அணு குண்டு சோதனைக்கான இக்கருவியை வடிவமைத்து வழங்கியது.
சைரஸ் அணு உலையில் தயாரித்த ஆறு கிலோ புளுத்தோனியம் இந்தச் சோதனைக்காகப் பயன்பட்டது. மும்பை ட்றோம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தக் கருவி தயாரானது, பிறகு பொக்ரானுக்கு எடுத்துச் சென்றார்கள்.
1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பொக்ரான் சோதனைக் கிராமத்தில் 107 மீட்டர் ஆழத்தில் இக்கருவியை இறக்கி பரிசோதனையை மேற்கொண்டார்கள்.

இச்சோதனை மூலம் சுமார் 12 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிக்கை வெளிவந்தது, ஆனால் உண்மையில் 2 முதல் 20 கிலோ டன்கள் வரை ஆற்றல் வெளியிட்டிருக்க லாம் என்பது மற்றவர்களின் வாதம் ஆகும். இந்த அளவு இன்றும் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்து வருகிறது. கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது மே 18, 1974 அன்று, இந்தச்சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. உலக வரலாற்றில் இடம்பெற்றது.