பள்ளிகள் திறக்கலாமா? பெற்றோர்களிடம் இன்றுமுதல் 3 நாட்கள் கருத்துக்கேட்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இறுதியாண்டு கல்லூரி படிப்புக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் பள்ளிகளை திறக்கக்கோரி சில பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பிறகு திறக்கலாமா என்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனையடுத்து, இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கருத்து கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் பங்கேற்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொலி மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் ஆணையர் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.