கொல்கத்தா: இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால், வங்கதேசத்துடனான டெஸ்டில் இன்னும் 142 ரன்கள் எட்டினால், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துவிடுவார்.

இந்தியா வந்துள்ள வங்கதேசம் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில், இந்திய பந்துவீச்சில் 106 ரன்களுக்கு சுருண்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய இளம்வீரர் மயங்க் அகர்வால் 142 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஜாம்பவான் டாட் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துவிடுவார். அதாவது, 13 இன்னிங்சில் 1,000 டெஸ்ட் ரன்களை எட்டியவர் பிராட்மேன்.

அந்த சாதனையை மயங்க் சமன் செய்வதற்கு 142 ரன்கள் தேவையாகும். இதற்கு முன்னர், இங்கிலாந்தின் சுட்கிளிக் 9 டெஸ்ட் மேட்சுகள், 12 இன்னிங்சில் 1,000 ரன்களை எட்டி முதலிடத்தில் இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீசின் வீக்சும், 3வது இடத்தில் பிராட்மேனும் உள்ளனர்.

இதில் பிராட்மேன், வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்சுகள் விளையாடி 1,000 ரன்களை விரைவாக எட்டி சாதனை படைத்திருக்கிறார். அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அதை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறார் மயங்க் அகர்வால்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 11வது இடத்தில் தற்போது மயங்க் அகர்வால் உள்ளார். ஏற்கனவே 2 இரட்டை சதங்கள் உள்பட 3 சதங்களை விளாசி இருக்கிறார். அவரின் ஆட்டத்திறனை பற்றி பேசிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர், அனுபவித்து ஆடும் சிறந்த வீரராக உருவெடுத்து இருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.