யோகியின் அலி – பஜ்ரங் பலி  பேச்சுக்கு மாயாவதி கடும் கண்டனம் 

பாடவுன், உத்திரப் பிரதேசம்

த்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசார உரைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடைபெறும் மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இம்மாநிலத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக சார்பில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது, “நமது பக்கம் அலியும் (இஸ்லாமியரும்) உள்ளனர். பஜ்ரங் பலியும் (அனுமானும்) உள்ளனர். ஆகவே நமது கட்சிக்கு இஸ்லாமியர் வாக்கும் கிடைக்கும். அதைப் போல் காட்டு வாசியான அனுமன் இனத்தை சேர்ந்த தலித் வாக்குகளும் கிடைக்கும்” என பேசி உள்ளார்.

கடவுளையும் சாதி வாரியாக பிரித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாடவுன் பகுதியில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஒரு பேரணியில் இணைந்து பங்கேற்றனர். அந்த பேரணியில் பேசிய மாயாவதி, “காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து வரிசையாக பொய்களாக கூறி வருகின்றனர். மொத்த்த்தில் பொய்கள் சொல்வதில் காங்கிரசும் பாஜகவும் ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி சளைத்தது அல்ல. ஆனால் பாஜக மதம் மற்றும் ஜாதி விஷயத்திலும் பொய் கூறி வருகிறது.

சமீபத்தில் முதல்வர் யோகி ஒரு கூட்டத்தில், ‘அலியும் பஜ்ரங் பலியும் நம்மவர்கள் என்பதால் இரு தரப்பினர் வாக்கும் நமக்கே’ என சாதி வெறியோடு பேசி உள்ளார். ஆனால் அவர் சொல்லியது போல் அனுமன் தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்றால் அது எங்களுக்கு தான் நன்மை ஆகும். ஏனென்றால் அலி என்னும் இஸ்லாமியரும் பஜ்ரங் பலி என்னும் தலித்துக்களும் பாஜகவை ஒதுக்கி விட்டனர். எனவே அவர்கள் இருவரும் எங்கள் கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள்.” என பேசி உள்ளார்.