எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பு: மாயாவதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் புறக்கணிப்பு?

புதுடெல்லி:

குஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ள எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து கொரோனா வைரஸ் விவகாரம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இன்று மதியம் மதியம் இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தை எப்படி கையாண்டது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு எப்படி செயலாற்றியது, ஊழியர்கள் சடத்தில் மாற்றம் செய்தது, பல்வேறு நாடாளுமன்ற கமிட்டிகளின் செயல்பாடுகளுக்கு முடக்கப் போட்டது உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், 35 வருடங்களாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த சிவசேனா முதல்முறையாக எதிர்கட்சியினர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ள எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று கட்சிகளுக்கும் காங்கிரஸூடன் அரசியல் பிரச்சினை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.