க்னோ

நாளை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்த உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இம்மாநிலங்களில் காங்கிரசுக்கு அமைச்சரவை அளிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆயினும் காங்கிரஸ் அமைச்சரவையில் இந்த இரு கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்காததால் இக்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அதிருப்தி குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளிப்படையாகவே டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த வருடம் மக்களவையின் ஆயுட்காலம் முடிவடைவதால் தேர்தல்கள் நடைபெறா உள்ளன. இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் சென்ற முறை 73 இடங்களைப் பிடித்ததால் தான் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

தற்போது பாஜகவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு கட்சித் தலைவர்களும் சென்ற வாரம் டில்லியில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சு வார்த்தை முடிவில் இந்த இரு கட்சிகள் காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாளை அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்த உள்ளனர்.

இந்த இரு கட்சிகள் கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்காது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சிக்கு உத்திரப் பிரதேசத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும் தங்களை யாரும் குறைவாக எண்ண வேண்டாம் எனவும் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.