‘இந்திய ஜனநாயகத்தின் அதிசயம் மாயாவதி’ என்றார் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ்.
கிட்டத்தட்ட தனது 40 வயதில் ஒரு தலித் பெண்மணி, உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்வது நிச்சயம் அரசியல் அதிசயம்தான்!
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், மாயாவதியின் அரசியல் பயணம் சிக்கல் வாய்ந்த ஒன்றாகத்தான் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில், ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மொத்தம் 6 பேர் வென்றனர். பின்னர், அந்த 6 ‍பேரும் அப்படியே காங்கிரசில் ஐக்கியமாகினர். தற்போது, அசோக் கெலாட் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ள சூழலில், தனது கட்சியின் சார்பில் வென்றவர்கள், காங்கிரஸ் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வென்றவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கட்சி மாறிய பிறகு, கொறடா உத்தரவெல்லாம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றுள்ளனர் அந்த சட்டமன்ற உறுப்பினர்கள்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்னதாக, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் மாயாவதி. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை மாயாவதி எடுப்பது இது புதிதான ஒன்றில்லைதான்.
தனக்கான அரசியல் சிக்கல்கள் வந்தபோதெல்லாம், அவர் மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஆட்சியை இழந்தபிறகு, அவரின் அரசியல் பயணத்தில் சரிவுகளே அதிகம்!
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளில், கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றும்கூட, ஒரு இடத்தைக்கூட அவரின் கட்சி வெல்லாமல் போனது. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலிலும், குறைந்த தொகுதிகளிலேயே(19 தொகுதிகள்) அவரின் கட்சி வெற்றிபெற்றது.
தனக்கான ஆதரவு தளத்தை பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சுரண்டும் நிலையில், இரண்டையும் சமதூரத்தில் வைக்கும் ஒரு அரசியல் யுத்தியை இவர் பின்பற்றுவது சாதாரணமானதுதான். ஏனெனில், தலித் நலன்களுக்கு பாடுபடும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக இவர் இந்தவகை அரசியலை மேற்கொள்வதுண்டு.
அதேசமயம், 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தல்களில் இவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயன்றார். ஆனால், அது ஒத்துவராத நிலையில், தேர்தல் முடிந்தபிறகு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், ராஜஸ்தானில் இவரின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுக்கு தாவியதை இவர் எதிர்பார்க்கவில்லை. கடந்த 2009-11ம் ஆண்டுகளில், தலித் வீடுகளில் உண்ணுதல் என்ற அரசியல் ஸ்டன்டை ராகுல் காந்தி மேற்கொண்டதானது, 2012 சட்டமன்ற தேர்தலில் மாயாவதியின் வெற்றியைப் பறித்ததாக கூறப்பட்டது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் அமைத்தக் கூட்டணியால் 10 இடங்கள் கிடைத்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பின்னர், அந்தக் கூட்டணியும் நிலைக்கவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, பாரதீய ஜனதாவோடு கூட்டணியின் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஒரு சதித்திட்டம் என்று நிராகரித்தார் மாயாவதி.
இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இல்லாத காலங்களில், அவரால் வேறுமாநில தேர்தல்களில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை மற்றும் சரியான அரசியல் முடிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.
அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில், அகிலேஷ் யாதவை முதல்வர் வேட்பாளராக ஏற்கவும் மாயாவதியால் முடியாது. மாயாவதியின் சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பாரதீய ஜனதாவிற்கு வாக்களித்துவிட்டு, தற்போது காங்கிரசுக்கு வாக்களிக்கிறார்கள்.
எனவே, வரும் நாட்களில், உத்திரப்பிரதேசத்தில் மாயாவதிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர், தனது அரசியல் வெற்றிகளுக்காக பெரியளவில் போராடும் நிலை வரும்!
 
நன்றி: டெக்கான் ஹெரால்டு