முழங்காலில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் மீண்டும் விளையாட வந்துள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரும் நவம்பர் 15 முதல் தொடங்கவிருக்கும் சீன சூப்பர் சீரியஸ் பிரீமியர் போட்டிகளில் விளையாடவுள்ளார். ஆனால் தனது பேட்மிண்டன் வாழ்க்கையின் இறுதியை நெருங்கியிருப்பதாக தான் உணர்வதாக அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளர்.

saina_nehwal

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் ஓய்வு பெற்றபின் தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சாய்னா இன்னும் தான் முழு ஆரோக்கியத்தை திரும்பப் பெறவிலை என்று உணர்வதாக தெரிவித்துள்ளார். வெற்றியோ தோல்வியோ நான் எதிர்கொள்ளப்போகும் போட்டியில் முழு மூச்சுடன் விளையாடுவேன். ஆனாலும் என் மனதின் ஆழத்தில் எனது பேட்மிண்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பலருக்கு எனது பேட்மிண்டன் வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் நானும் கூட எனது ஆழ்மனதில் அப்படித்தான் உணர்கிறேன். இது அவர்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியை கொடுக்கலாம். எது எப்படியோ அவர்கள் என்னைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறேன் என்பதை முடிவு செய்யும் தருணம் வந்திருப்பதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சாய்னாவுக்கு இப்போது 26 வயதாகிறது. கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறினார். பின்னர் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில மாதங்கள் ஓய்வுக்குப் பின் சாய்னா தனது பயிற்சியாளர் விமல் குமாரின் மேற்பார்வையின் கீழ் மறுபடியும் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.