மயிலாடுதுறை,

144 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா தொடங்கியது. இதன் காரணமாக காவிரியில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை தொடர்ந்து மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா என்று வரலாறு கூறுகிறது.  ஈரேழு உலகத்தில் உள்ள மூன்றரை கோடி தீர்த்தத்திற்கு அதிபதியானவர் புஷ்கரன் என்பவர். இவர் பிரம்ம தேவனின் கரங்களில் இருப்பவர்.

குருபகவான் பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். பிரம்மன் குருதேவனின் தவத்தினை கண்டு மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். குருபகவான், பிரம்ம தேவனின் கரங்களில் இருக்கும் அமிர்த கலசத்தினை கேட்டார். அந்த அமிர்த கலசத்துக்குத் தான் புஷ்கரம் என்று பெயர். பிரம்மா புஷ்கரனை குருவுடன் செல்லும்படி கூறினார்.

ஆனால் புஷ்கரன் என்னும் தேவதை பிரம்ம தேவனை விட்டு செல்ல மறுக்கிறார். இதற்காக தன் வாக்கினை காப்பாற்ற பிரம்மா, புஷ்கரனிடம் ஒரு ஆலோசனை கூறுகிறார்.

அதாவது குருபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது (குருப்பெயர்ச்சி), குரு எந்த ராசியில் இருக்கிறாறோ அங்கும் அடுத்த ராசிக்கு செல்லும் போதும் 13 நாட்கள் இருந்து விட்டு மீண்டும் தன்னிடம் வந்துவிடும்படி கூறினார் பிரம்மதேவன். பிரம்மதேவனின் வாக்கை காப்பாற்ற புஷ்கரன் சம்மதித்து குருபகவானிடம் சேர்கிறார்.

குருபகவான் எந்த ராசிக்கு மாறுகிறாரோ அந்த ராசியின் நதி எதுவோ அங்கு வந்து புஷ்கரன் தேவதை (அமிர்தகலசம்) தங்குவார். புஷ்கரன் தங்கும் காலமே அந்த நதியின் புஷ்கரமாக கருதப்படுகிறது.

பிரம்ம தேவனின் அருளாலும், குருபகவானின் பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும் போது 66 கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் கலப்பதாக ஐதீகமும், நம்பிக்கையும் ஆகும்.

தற்போது நடைபெற்றுள்ள குரு பெயர்ச்சியின் காரணமாக,  காவிரி நதியில் புஷ்கரமானவர் இந்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை வாசம் செய்வதாக ஐதீகம்.

இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபுத்ரா, சிந்து, பிராணஹிதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசி துலாம் ராசியாக இருப்பதாலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும் அரசு உதவியுடன் இந்த புஷ்கர விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மயிலாடுதுறையில்  144 வருடங்களுக்கு பின் காவிரி மகா புஷ்கர விழா தொடங்கியது. இதையொட்டி மயிலாடுதுறையை நோக்கி ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.

தற்போது குரு பெயர்ச்சியானது,  12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.  ஓராண்டு காலம் அவர்  துலாம் ராசியில் சஞ்சரிப்பார்.

இந்நிலையில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து  நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை.

இதையடுத்து, இன்று விழா தொடங்கியது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், யாகம் செய்த புனித நீரை காவிரியாற்றில் ஊற்றி புனிதபடுத்தினார். தொடர்ந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட பல படாதிபதிகள், சாதுக்கள் காவிரியில் புனித நீராடினர்.

இந்த புஷ்கர விழா வரும் 24 வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, மயிலாடுதுறைக்கு  24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். திருச்சியில் இருந்தும்,  ஸ்ரீரங்கத்தில் இருந்தும் 24 மணி நேரமும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.