ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார்.

இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அவரது தரப்பில் தெரிவிக்கப்படும் காரணம் இது:

‘’அ.தி.மு.க.வுக்கு பா.ம.க.வை விட நாங்கள் நிச்சயம் உபயோகமாக இருப்போம். அந்த கட்சிக்கு தமிழகத்தின் வடக்கு பகுதியில் மட்டும் தான் வாக்கு வங்கி உள்ளது. நாங்கள் தமிழகம் முழுவதும் கிளைகள் பரப்பி நிற்கிறோம். அவர்களுக்கு 7 லோக்சபா-ஒரு ராஜ்யசபா கொடுத்துள்ளனர். அதுபோல் எங்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது?’’ என்பது தே.மு.தி.க.தரப்பு வாதம்.

நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் –அ.தி.மு.க.அசைந்து கொடுப்பதாய் இல்லை.

‘’3 அல்லது  நான்கு தொகுதிகளுக்கு மேல் கிடையாது’ ’என்று கோயம்பேடு ஆபீசுக்கு தாக்கீது அனுப்பி விட்டது அ.தி.மு.க. இருப்பினும் பேச்சு வார்த்தை தொடர்கிறது.

இந்த நிலையில்-

உதிரி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கும் வேலையையும் அ.தி.மு.க.மேலிடம் தொடங்கி விட்டது.

இரண்டு தொகுதிகள் கேட்ட ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு –மயிலாடுதுறையை கொடுத்துள்ளது. அங்கு அ.தி.மு.க. தவிர பா.ம.க.வுக்கும் நல்ல அடித்தளம் உள்ளதால் த.மா.கா. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அந்த கட்சியினர் கூறுகின்றனர்

த.மா.கா. தவிர புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி மற்றும் புதிய நீதி கட்சிக்கு தலா ஒரு தொகுதியை தனது கோட்டாவில் இருந்து ஒதுக்க உள்ளது –அ.தி.மு.க.

—பாப்பாங்குளம் பாரதி