கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது!

--

தஞ்சாவூர்,

என்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் இன்று 11வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த எண்ணை கொண்டு செல்லும் குழாய் உடைந்து எண்ணை வெளியேறியதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி இன்று 11வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகிளல்  இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருவிடைமருதூர், ஆடுதுறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கதிராமங்கலம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினரை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.