38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை:

நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியும் பிரிக்கப்பட்டு தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையும், சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.


இந்நிலையில் நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்று முடிவடைய உள்ளது. இந்நிலையில் முதல்வர் 110ன் கீழ் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.