சென்னை: மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
முக்கியமாக, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் (கவுன்சிலர்களே மேயரை, தலைவரை தேர்வு செய்வது) நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்கான அவசரச் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் முறை வந்தால், கூட்டணி கட்சிகளை சமாளித்துவிடலாம், கவுன்சிலர் பதவிகளை வென்று வாருங்கள், அதன் பின்னர் மற்ற பதவிகளை பற்றி முடிவு செய்யலாம் என்று திட்டம் வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.