Random image

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த எம்பிஏ பட்டதாரி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் எம்பிஏ பட்டதாரி பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தது தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் காட் பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் அப்பாஸ் வானி (வயது 29). இவர் கத்ராவில் உள்ள மாதா வைஷ்னோ தேவி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். இந்நிலையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் இவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் கடந்த சனிக்கிழமை முதல் வைரலாகியுள்ளது. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில்,‘‘ தற்போதைய சூழ்நிலையில் ஜிகாத் என்பது தேவையற்றது. வயதான பெற்றோருக்கு சேவை செய்வதே பெரிய ஜிகாத். அதனால் அவர் திரும்ப வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது மாமா பாரூக்கு அகமது வானி கூறுகையில்,‘‘அவர் கல்வியில் சிறந்து விளங்கினார். பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு எப்போது தொடர்பு இருந்தது இல்லை. ஜம்முவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தவறான பாதையில் அவரை அழைத்து சென்றது யார்? என்பது தெரியவில்லை’’ என்றார். குடும்பத்தினர் அவருக்கு அழைப்பு விடுக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ மேஜர் ராஜீவ் நந்தா கூறுகையில்,‘‘வானி பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருக்கும் தகவல் நேற்று தான் கிடைத்தது. அவர் மனம் மாறி மீண்டும் நல்வழிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் திரும்பி வந்தால் அவருக்கு உதவ தயாராக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறோம். அவருக்கு யார் இந்த வழியை காட்டியது என்பது தெரியவில்லை?’’ என்றார்.