ணக்கம்…. வணக்கம்… வணக்கமுங்க… நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுறேன்.

நம்ம பத்திரிகை டாட் காம் இதழ்ல என்னோட கட்டுரைங்களை படிச்சுட்டு ஏகப்பட்ட பேரு பேசறாங்க…! என்ன ஒண்ணு… பேசற பல பேரு ஏசறாங்க…!

நம்மளை விடுங்க… போயிட்டு போவுது… ஜனநாயகத்துல இதெல்லாம் ஜகஜம்தானே…!

ஆனா, விமர்சனம்கிற பேருல நாகரீகம் இல்லாம ஏசறவங்களே.. அதைத்தான் தாங்க முடியல..  அட… என்னை விடுங்க.. நான் சாமானிய ஆளு..

மூத்த அரசியல் தலைவர் வைகோவை, சமூகவலைதளங்கள்ல ரொம்பவே கிண்டலடிக்கிறாங்க..

அரசியல் ரீதியா வைகோவோட நிலைபாடுகள்ல உடன்பாடு இல்லாதவங்க கூட, மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் நடத்தற போராட்டங்களை நிச்சயம் மதிப்பாங்க.

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், கருவேலமரத்தை அழிக்கும் நடவடிக்கை.. இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

ஆனா அவரோட மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களைையும் ஓவரா கிண்டலடிக்கிறது ரொம்பக் கொடுமைதான்.

சமீபத்துல நாகர்கோயில்ல நடந்த ம.தி.மு.க. தொண்டரோட திருமண விழாவுல பேசின வைகோவே, இதுபத்தி ஆதங்கத்தோட பேசியிருக்காரு.

அந்த ஆடியோவை கேட்டுப்பாருங்க…

( வைகோ பேசியதன் வரி வடிவம்:

“இப்ப நான் இருக்கும்போது செந்திலதிபன் என்கிட்ட பேசினார். ..நான் வரும்போது சத்யா, நான் வரமுடியல சுபேஸ்கிட்ட சொல்லிடுங்க.. ரொம்ப வருத்தமா இருக்குன்னார். என்னன்னு கேட்டேன்.

உங்களை ரொம்ப இழிவு படுத்தி சோசியல் மீடியால ரொம்ப போடுறாங்க.. ஒரு வருசமா போட்டாங்க . இப்ப ஒரு மாசமா ரொம்ப அதிகமா போடுறாங்க.. உங்களை கேவலமான ஒரு மிருகத்தின் தலைக்குள்ள உங்க படத்தை வச்சி.. ரொம்ப இழிவான வார்த்தைளை போட்டு எல்லாம் முகநூல்ல வாட்ஸ்அப்ல அனுப்புறாங்க. அதே போல என்னு ய வீட்டு முகவரி தொலைபேசி எண்ணை போட்டு நெருப்பா இவன சுடுங்க  அப்படின்னு சுற்றறிக்கை அனுப்பறாங்க.

நான் கவலைப்படல..

அதாவது கோடிக்கணக்குல செலவழிச்சு.  லைக் போடணும்னா  மூன்னூறு ரூபா.. ஒரு லைக் போடணும்னா முந்நூறு ரூபா..

இதனால் எல்லாம்.. நான் வந்து பிரளயங்களையும் எரிமலைகளையும் நேரடியாக சந்தித்துவிட்டு வாழ்ந்து வருகிறவன்..

ஆனால் இந்த சமூகம் எப்படி சீரழிகிறது பாருங்கள்.. கருத்துக்கு கருத்தைச் சொல். வாதத்துக்கு வாதத்தை வை. அப்படித்தான் அண்ணா வளர்த்தார். அப்படித்தான் பெரியார் பகுத்தறிவை வளர்த்தார். அப்படித்தான் இயக்கம்.. திராவிட இயக்கம் வளர்ந்தது.

இது ஒரு காலித்தனமான கூட்டம். பழைய தி.மு.க. தோழர்கள் அல்ல. இன்றைக்கும் தி.மு.க.வில் இருக்கும் பழைய தோழர்கள்.. அண்ணாவின் வார்ப்புகளாக.. மனம் உடைந்தவர்களாக இருக்கிறார்கள்… லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்கள்.

இது ஒரு கூட்டம். இவர்கள்.. இந்த.. இழிவு படுத்தும் வேலையைச் செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் சரியான பாதையில்தான் செல்வேன்.

நான் தூக்கி எறியப்பட்டேன்!”)

வைகோவோட ஆதங்கம் நியாயம்தான்.

எனக்குத் தெரிஞ்சி நாகரிகமா பேசற  அரசியல் பிரபலங்கள்ல வைகோவும் ஒருத்தரு. சமீபமாத்தான் சில சமயங்கள்ல தடுமாறிடுறாரு. தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அவரோட குலத்தொழிலை பார்க்கலாம்ணு சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டாரு. மத்தபடி வைகோ நாகரீகமான மனுசன்தான்.

அதே நேரம், தன்னோட நாகரீகத்தை தன் கட்சிக்காரங்களுக்கும் அவரு சொல்லிக்கொடுக்கணும்.

சமூகவலைதளங்கள்ல.. குறிப்பா பேஸ்புக்ல அவரோட கட்சிக்காரங்க சில பல பேரு தீவிரமா இயங்கறாங்க. அவங்கள்ல சில பல பேரு, ஆபாசமா அருவெறுப்பா  எழுதறாங்க.

அதாவது வைகோவை யாராவது விமர்சிச்சா, உடனே இவங்க பொங்கி எழுந்து நாராசமா எழுத ஆரம்பிச்சிடுறாங்க. ஒரு உதாரணம் கீழே..

மதிமுக தொண்டரின் தரம் தாழ்ந்த பதிவு: 1

“அரசியலில் நேர்மை , பொதுவாழ்வில் தூய்மை , லட்சியத்தில்  உறுதி”ன்னு கொள்கை முழக்கத் தோட தனிக்கட்சி கண்டவரு வைகோ. அவரோட ரசிகர்கள்.. ஆமா.. தொண்டர்கள் அப்படி பேச மாட்டாங்க.. சில ரசிகர்கள்தான்.. ஆபாசமா பதிவிடுறாங்க. அதை வைகோ தடுக்கணும். அதுதான் அவரு கட்சிக்கு நல்ல பெயரை தேடித்தரும்.

வைகோவை யாராவது விமர்சிச்சா உடனே, அதைவிட மோசமா திட்டறங்க. ரெண்டுமே தப்புதான்.

“பத்தினி – விபசாரி என்ற இரண்டு சொல்லாடலுமே, பெண்களை கொச்சைப்படுத்துவதுதான்” என்றார் பெரியார். அவர் வழிவந்ததாக சொல்லுற மதிமுக பெயரை வச்சுகிட்டு ஆபாசமா ஏசறாங்களே அப்படிங்கிறதுதான் உண்மையான பெரியாரிஸ்டுகளோட கேள்வி.

லட்சம் இளைஞர்களுக்கு திராவிட பாடத்தைப் புகட்டப்போறதா வைகோ அறிவிச்சிருக்காரு. முதல்ல, மதிமுகவில இருக்கிற சில அறியாமை மனிதர்களுக்கு பெரியாரிசத்தை வைகோ புகட்டணும்.

இதுதான் அந்த கட்சியோட மரியாதையை உயர்த்தும்.