இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு, மதிமுகவுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும், அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுதான் கவனிக்கத்தக்க அம்சம்!

நாம் இப்போது கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மதிமுகவின் நிலைப்பற்றி ஒரு சிறிய பார்வையை ஓடவிலாம்.

* 2001 – திமுக கூட்டணியில் இருந்தது மதிமுக. அக்கூட்டணியில், சட்டமன்ற தேர்தல் சமயத்தில் மதிமுகவும், விடுதலை சிறுத்தைகளும், பாஜகவும் மட்டுமே குறிப்பிடத்தக்க கட்சிகள். திமுக கூட்டணியில் 20 இடங்களுக்கு மேல் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், கேட்ட சில குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்றுகூறி, தேவையில்லாமல் கூட்டணியை விட்டு வெளியேறியது மதிமுக. தனித்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த வாக்குகளையேப் பெற்றது அக்கட்சி. எதுவும் தேறவில்லை. சமயோசிதமாக செயல்பட்டிருந்தால், அப்போதே அக்கட்சிக்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருப்பார்கள்.

* 2006 – தேர்தலுக்கு சிலகாலம் முன்புவரை திமுக கூட்டணியில்தான் இருந்தது. ஆனால், மதிமுகவுக்கு மட்டும் கூட்டணியில் சில இடங்கள் குறைத்து கொடுக்கப்படலாம் என்று பரவிய தகவல்கள் மற்றும் அதிமுக காளிமுத்துவின் பகிரங்க அழைப்பு என்று சில காரணங்களால், தேவையே இல்லாமல், ஒரு வெற்றிக் கூட்டணியிலிருந்து கழன்றுகொண்டு, அதிமுக கூட்டணியில் இணைந்தது. அதாவது, தன்னை ‘பொடா’ சட்டத்தில் சிறையில் அடைத்த ஜெயலலிதாவை, மீண்டும் முதல்வராக்க பிரச்சாரம் செய்த அரசியல் அவலம் அப்போது நேர்ந்தது.

அதிமுக கூட்டணிக்குச் சென்று 35 இடங்களைப் பெற்று, வெறும் 6ல் மட்டுமே வென்றது. அதேசமயம், திமுக  கூட்டணியில் இருந்திருந்தால், எப்படியும் 15 வரையிலான இடங்களில் வென்று, மதிமுகவை ஒரு வலுவான கட்சியாக மாற்றியிருக்கலாம். ஆக, இதிலும் தவறான முடிவு.

* 2011 – கடந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் நல்ல வாய்ப்பிருந்தும் அதை தவறவிட்ட வைகோ, இப்போது 5 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்தார். ஆனால், புதிதாக சேர்ந்த கட்சிகளுடனெல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்த ஜெயலலிதா, மதிமுகவை காக்க வைத்தார். கடைசியில், மதிமுகவுக்கு ஒற்றை இலக்க இடங்களையே ஜெயலலிதா அளிக்க முன்வந்த காரணத்தால், அந்த சட்டமன்ற தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆக, வைகோவை திட்டமிட்டு அவமானப்படுத்தினார் ஜெயலலிதா. அரசியலில் தனக்கு குருவாக இருந்த கலைஞர் கருணாநிதியை எளிதாக உதறிவிட்டு சென்றவர், ஜெயலலிதாவிடம் அவமானப்பட்டார்.

* 2016 – இத்தேர்தலுக்கு முன்பாக 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, பாமக, தேமுதிக இணைந்த கூட்டணியில் இடம்பெற்றார். ஆனால், 2011 சட்டமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணி பிரிந்தது. அதன்பிறகு, கலைஞர் கருணாநிதி 18 இடங்களைத் தருவதாக கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், ஸ்டாலின் எக்காரணம் கொண்டும் முதல்வராகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து, தன்னை ‘பொடா’ சட்டத்தில் சிறையில் வைத்த, 2011 சட்டமன்ற தேர்தலில் அவமானப்படுத்திய ஜெயலலிதா மீண்டும் முதல்வராக, மக்கள் நலக்கூட்டணியில், அரும்பாடுபட்டு விஜயகாந்தையும் இணைத்து திமுக மயிரிழையில் தோற்பதற்கு காரணமாக இருந்தார். ஸ்டாலின் முதல்வராகக்கூடாது என்று கங்கணம் கட்டியவர், இப்போது விஜயகாந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்த அவலம் நேர்ந்தது!

அத்தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அரசியலில் செல்லாக்காசாகி போனார் வைகோ. இதன்விளைவு, 2019 நாடாளுமன்ற தேர்தலில், மதிமுகவுக்கு 1 மக்களவை, 1 மாநிலங்களவை என்று ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு மக்களவை தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நின்றார் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.

* 2021 – இத்தேர்தலில், திமுக கூட்டணியிலேயே இடம்பெற்றிருக்கும் வைகோவின் மதிமுகவுக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் அத்தனை தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டுமென்ற ஒப்பந்தத்துடன்.

கடந்தகால தேர்தல்களில் கிடைத்த நல்வாய்ப்புகளையெல்லாம் வீணடித்ததன் விளைவு, இன்று கட்சியே கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது.

ஆக, எந்த ஸ்டாலினுக்கு எதிராக வைகோ கொம்பு சுற்றிவந்தாரோ, அந்த ஸ்டாலின் தலைமையிலான திமுகவிலேயே தனது கட்சியைக் கிட்டத்தட்ட கரைத்துவிட்டார்! “மறுபடியும் திமுக” என்று ஒருசமயம் கிண்டலடிக்கப்பட்ட மதிமுக, இப்போது அந்த நிலையை கிட்டத்தட்ட அடைந்துவிட்டது!

அரசியலில் பலருக்கும் இல்லாத சில அரியப் பண்புகளைப் பெற்றிருந்தாலும், தேர்தல் அரசியல் வியூகம் குறித்த திறமையின்மையால், மதிமுகவை, “மறுபடியும் திமுக” ஆக்கிவிட்டார்.