மீ டூ: நடிகர் அர்ஜுன் மீது  நடிகை ஸ்ருதி குற்றச்சாட்டு!

டிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.  ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்த  விவகாரம் இந்தியாவில் முதன்முறையாக பாலிவுட்டில் மையம் கொண்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா இதைத் துவங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த ஒருமாத காலமாக இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதற்கு வைரமுத்து, “காலம் பதில் சொல்லும்” என்று மட்டும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் ராதாரவி,  பிராமணர் சங்க தலைவர் நாராயணன், கர்நாடக இசை வல்லுநர்கள் டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது  கன்னட உலகின் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மீடூ இயக்கம் எங்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.  பாலியல் புகார்களை முன் வந்து சொல்வதற்கு துணிச்சலை அளித்துள்ளது. பலமுறை நான் பாலியல் அத்து மீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்னைதான் எனக்கும் ஏற்பட்டது. தேவையற்ற ஆபாசப் பேச்சுக்கள், வக்கிர செய்கைகள் என நான் பல அத்துமீறல்களை சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசவுகரியமாக உணர்ந்திருக்கிறேன்.  ஆனால், தொடர்ச்சியாக உடல் ரீதியாக, மனரீதியாக இத்தகைய தொந்தரவுகளில் இருந்து தப்பித்து வந்தேன். ஆனால் 2016 ம் வருடம்  நடந்த சம்பவம் என்னை மனரீதியாக மிகவும் பாதித்து விட்டது.

நடிகர் அர்ஜுன் உடன் இருமொழியில் தயாராகும் படமொன்றில் அப்போது நடித்துக் கொண்டிருந்தேன். அவருடைய படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மிக மிக மகிழ்ந்தேன்.  படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்கள் இயல்பாகவே சென்றன. படத்தில் அவருடைய மனைவியாக நடத்தேன். எங்களுக்கு இடையே ஒரு ரொமாண்டிக் காட்சி ஒருநாள் படமாக்கப்பட்டது. ஒரு நீண்ட வசனம் பேசிய பிறகு, இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டிய காட்சி.

ஒத்திகையின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல்லாமலே, என்னுடைய அனுமதி இல்லாமல், கட்டிப்பிடித்தவாறு என் முதுகில் அவருடைய கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.

உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா என்று  கேட்டேன். அவர் பதில்

இதனால் அதிர்ச்சி அடைந்தேன். அதே நேரம்,  திரைத்துறையில் இது சகஜம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன்.

எனக்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை. கோபமாகதான் இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. மேக் அப் அறை குழுவினரிடம் மட்டும் கூறினேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது” என்று  அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.