#Me too வும் கீரி பாம்பு சண்டை உதாரும்..

சிறப்புக்கட்டுரை: #Me too வும் கீரி பாம்பு சண்டை உதாரும்..

ட்டுரையாளர்.: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

முக்கிய அரசியல் விவகாரங்களை பலவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு நாடு முழுவதும் பரபரப்பை அள்ளிக்கொண்டிக்கிறது #MeToo என்ற ஆஷ்டேக்.
காரணம், பாலியல் ரீதியான குற்றச்சாட்டு என்றாலே பதைபதைப்புக்கு எவ்வளவு பஞ்சமிருக்காதோ, அதேபோல, பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்பதுதான்.
உலக அளவில் பல பிரபலங்களின் தலையை உருட்டிவரும் இந்த மீடூ விவகாரம் என்பது ஒரு கத்தியை போன்றது.

சமுதாயத்தை பிடித்திருக்கும் பெண்வெறியை வேரறுக்க, பல பெண்களுக்கு துணிச்சலை தரும் ஒரு டாக்டரின் அறுவை சிகிச்சைக்கான கத்தியாகவும் இருக்கலாம், பணம் பறிப்பதற்காக அப்பாவிகளை மிரட்டும் வழிப்பறி கொள்ளையன் கையிலுள்ள கத்தியாகவும் இருக்கலாம்.

வெளிப்படையாக சொன்னால், இந்த விவகாரத்தில் எல்லா மட்டத்திலும் சிக்கல்களே அதிகம் தென்படும். கேள்விக்கு எதிர்கேள்வி முளைத்துக்கொண்டேபோய் வட்டவடிவில் சுற்றிச்சுற்றி தொடங்கிய இடத்திற்கே வந்தே சேரும். அப்புறம், வந்து சேர்ந்த இடத்திலிருந்தே மறுபடியும் புறப்படும்.

பாதிக்கப்பட்டதாக ஒரு பெண் புகார் சொன்னால், முதலில் எழும் கேள்வி இவ்வளவு ஆண்டு காலமாய் எதற்காக மறைத்து ஏன் காத்திருந்தீர்கள்?
‘’அப்போது நான் பலகீனமான நிலையில் இருந்தேன். என் வேலை வாய்ப்பும் எதிர்காலமும் பறிபோய்விடும் என்பதால் பொறுத்துப்போகவேண்டியிருந்தது இப்போது பாதுகாப்பான நிலையை உணர்வதால் குற்றவாளியை தைரியமாக அடையாளம் காட்டுகிறேன்’’ என்று பெண் சொல்லுவார்.

உடனே என்னென்ன கேள்விகள் எழும்? மானம் பெரிதா, வேலை பெரிதா என்று வரும்போது உங்களுக்கு வேலைதான் அந்தநேரத்தில் பெரியதாக தெரிந்திருக்கிறது. அப்போது சிறியதாக தெரிந்த பாலியல் கொடுமை இப்போது எப்படி மிகப்பெரியதாக தெரிகிறது?

ஒருவேளை பாதுகாப்பான கட்டத்தை நீங்கள் எட்டாவிட்டால் கடைசிவரை கொடுமையை வெளியே சொல்லியிருக்க மாட்டீர்களா? இல்லை போகட்டும் என்று பெருந்தன்மையின் அடையாளமாக விட்டுவிட்டீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி பெருந்தன்மை, சகிப்புத்தன்மை உள்ளவரென்றால், இதே பாலியல் அத்துமீறலை சாலையில் போகும்போது ஒருவன் செய்தால் பொங்கியெழ மாட்டீர்களா? இப்படி சராமாரியாக கேட்பார்கள். கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மத்திய இணையமைச்சராகியிருக்கும் எம்.ஜே.அக்பர்மேல் குற்றம் சாட்டும் பெண் செய்தியாளர்கள் மீதும் இந்த ரகத்தில்தான் கேள்விகள் வீசப்படுகின்றன.

பாலியல் சீண்டலை அம்பலப்படுத்தி போராடவில்லை என்றால் அதற்கு அப்பட்டமான காரணம் என்ன? கோழைத்தனமா அல்லது வேலைக்கு சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டு ஒதுங்கிப்போய்விடுவோம் என்ற சுயநலமா? சமூகத்தின் பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்புவைத்துக்கொண்டு சகல பலத்துடன் இயங்கிவரும் ஆனானப்பட்ட ஒரு செய்தியாளரே தனக்கு நடக்கும் கொடுமையை கண்டு துணிச்சலோடு சீறாமல் இருந்ததை என்ன கணக்கில் வைத்துக்கொள்வது? இப்படி கேள்விகள் போய்க்கொண்டே இருக்கும்..

பெண் செய்தியாளர்களிடம் கேட்டால், எங்களை சீண்டியவர் எங்களைவிட பல மடங்கு செல்வாக்கு பெற்றவராயிற்றே என்று சொல்வார்கள். அப்படியானால் கொடுமையை எதிர்ப்பதில், பலம்வாய்ந்தவர், பலமில்லாதவர் என்ற அளவு வைத்துக்கொண்டுதான் பொங்குவீர்களா என்ற கேள்வி வரும்.. ‘’மறுபடியும் மொதல்ல இருந்தா?’’ என்று வடிவேலு பட சீன்தான் அங்கே மிஞ்சும்.

அடுத்தபடியாக, பெண்களிடம் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை கொடுங்கள் என்று சொல்லும்போது வேறொருவிதமான சிக்கல் வரும். வலுவான ஆதாரங்களை கொடுக்கவே முடியவில்லை என்பதற்காகவே பெண்ணின் குற்றச்சாட்டை இங்கே அலட்சியப்படுத்த முடியாது. குற்றச்சாட்டும் தொணியில் வலுவும் நேர்மையும் இருக்கிறதா என்பதை பார்த்தாலே போதும்.

பொதுவாக பாலியல் பலாத்காரத்திற்கும்.. பாலியல் சீண்டல்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டும். பலாத்காரம் என்றால், அத்துமீறி பெண்ணின் இருப்பிடத்திற்கு நுழைதல், அல்லது கடத்திக்கொண்டு போவது, உடற் காயங்கள், விந்தணு தொடர்பான தடயங்கள், என குற்றவாளிக்கு எதிராக ஏராளமான பல ஆதாரங்களை திரட்டிவிட முடியும்.

ஆனால் எதிர்பாராதவகையில், ஆபாச சைகை, கட்டிப்பிடிப்பது, தெரியாததுபோல் அந்தரங்கங்களை தொடுவது, உரசுவது, பாலூணர்வை தூண்டும்வகையில் பேசுவது என பாலியல் சீண்டல், அத்துமீறல்களிள் வகையே தனியானவை. அவற்றிற்கு எதிராக உறுதியான ஆதாரத்தை திரட்டுவதோ வைத்திருப்பதோ, திரட்டுவதோ கடுமையான காரியம். மற்ற குற்றச்செயல்களில் காட்டுவதைப்போல சுலபத்தில் இங்கே ஆதாரத்தை காட்டவே முடியாது.

அதுவும் நவீன தகவல்தொடர்பு சாதன வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் நடந்த பாலியல் கொடுமைகள் தொடர்பாக, அசைக்கமுடியாத ஆதாரம் எனப்படும் மெட்டீரியல் எவிடென்சுகளை கொடுப்பது மிகமிக கடினம். இது குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ள விஷயம்.

எம்.ஜே.அக்பர் விவகாரத்தில் பெண் செய்தியாளரின் குற்றம்சாட்டில் ஒரு பகுதியை பார்ப்போம்.

‘’1997 ஆம் ஆண்டு ஒரு நாள், அலுவலக அறையில் என் பின்னால் வந்து என் இடுப்பை பிடித்தார். நான் உடம்பெல்லாம் உதறல் எடுத்துப்போய் எழுந்து நிற்க முற்பட்டேன். ஆனால் அவரின் கைகள் என் மார்பங்களில் தொடங்கி இடுப்புவரைக்கும் வியாபித்திருந்தன. கைகளை தட்டிவிட முயற்சித்தேன். ஆனால் அவை என் இடுப்பை பசைபோட்டு ஒட்டினார்போல் ஒட்டிக்கொண்டிருந்தன. அவரின் கை கட்டை விரல்கள், என் இரு பக்க மார்பகங்களை தேய்த்தபடி இருந்தன…..’’

இந்த சில விநாடிகள் சம்பவத்திற்கு எப்படி அந்த பெண் நேரடி ஆதாரங்களை திரட்டித்தரமுடியும்.

ஆனால் எல்லா இடங்களிலும் செல்போன்கள், கண்காணிப்பு கேமராக்கள் நீக்கமற நிறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக ஆதாரங்களை பெண்கள் தாராளமாக திரட்டிவிட முடியும்.

இப்போதைக்கு எல்லாவற்றையும்விட இங்கே முக்கியமாக பார்க்கவேண்டியது, குற்றம் சாட்டுபவர்கள் உண்மையிலேயே எந்த நோக்கத்தில் வெளியே வருகிறார்கள், எந்த விதத்தில் விஷயத்தை கையாளுகிறார்கள் என்பதைத்தான்.
வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என்று சொல்லும் சின்மயி, அதன் பிறகு தனது திருமணத்திற்கு அதே வைரமுத்துவை அழைத்தது எப்படி என்று கேட்டால், திரையுலகினர் அனைவரையும் அழைத்தபோது அவரின் குடும்பத்தினரையும் அழைத்தோம் என்று பதில் கிடைப்பதை இங்கே நினைவு படுத்தி பார்த்தால் புரியும்.

பாலியல் சீண்டல் என்பது என்பது சிவில் சமாச்சாரம் அல்ல. சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றம். ஆகையால் சட்டத்தின்பிடிக்கு செல்லாதவரை, குற்றம்சாட்டி பேசுவது வெறும் வாய்ச்சவடால்தான்.. காவல்துறையில் புகாராகி, குற்ற முகாந்திரம் இருந்தால் வழக்காக பதிவாகி புலன் விசாரணை முடிந்து நீதிமன்றத்தின் கைககளில் முடிவை ஒப்படைப்பதே இங்கே பிரச்சினைக்கான உண்மைத் தீர்வு

மற்றவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் குற்றவாளிகளை தண்டித்தே ஆகவேண்டும் என்று புகாரோடு வெளியே வருகிறவர்கள் சட்டபூர்வ நீதியைத்தான் நாடிச்செல்வார்கள்.

அப்படி செய்யாமல் பொதுவெளியில் பரபரப்புக்காக மட்டும் பேசிவருபவர்கள், ஒன்று வீண் விளம்பரத்திற்காக அலைபவர்களாக இருக்கவேண்டும். இல்லையென்றால் தொழிலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஆணை அசிங்கப்படுத்தி பழிவாங்கும் முயற்சியில் இறங்கவேண்டும்.

அதேபோல, குற்றச்சாட்டுக்கு ஆளாகிறவர்கள், சம்மந்தப்பட்ட பெண்ணைப்பார்த்து வழக்கு தொடருங்கள் எதிர்கொள்கிறேன் என்று சொல்வதெல்லாம் பயங்கரமான காமெடி வகையையே சாரும். நான் தவறே செய்யவில்லை என்று ஆண்மையோடு மார் தட்டிச்சொல்லவேண்டும். தப்பே செய்யாமல் மானத்தை வாங்குகிறார்கள் என்றால் மானநஷ்ட வழக்கு போடலாம்.. அதைவிட தன்னை தவறாக பொது வெளியில் களங்கப்படுத்துகிறார் என்றும் இதற்கு பின்னால் கிரிமினல் சதி இருக்கிறது என்றும் ஆணே காவல்துறையில் புகார் செய்யலாம்.
போலீசார் விசாரிக்க ஆரம்பித்தால் ஏதோ தரப்புமீது கிரிமினல் வழக்கு பாயப்போகிறது. அதன்பிறகு இரு தரப்பு வழக்கறிஞர்களும் எதிர் தரப்பு குற்றச்சாட்டுக்களை அலசி நொறுக்கப்போகிறாகள். நீதிமன்றத்தில் பொய்கள் கரைந்து உண்மை கிடைத்ததும் நீதி அதன் பணியை செய்யப்போகிறது.
இதைவிட்டுவிட்டு, மீடியாக்கள் வழியாக மாறிமாறி ஏவுகணை விடுவது ஊரை ஏமாற்றுகிற செயலன்றி வேறென்ன?

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா, என சவால்விடும் பெண்கள், அதே போன்ற சோதனைகளை உட்படுத்திக்கொள்ள தாங்களும் தயார் என்று சொல்லவேண்டும்.

குற்றம்சாட்டும் பெண்ணுக்கும் சரி, எதிர்தரப்பு ஆணுக்கும் சரி, காவல்துறையிடம் செல்வதற்கான வாய்ப்பு சமமாகவே உள்ளது. ஆனால் இவர்கள் மட்டுமல்ல, மீடூ சம்மந்தப்பட்ட கோஷ்டிகள் எதுவுமே அப்படி போகுமா என்பதே இங்கே கேள்வி.
இரு மாதங்களுக்கு முன்பு, சினிமா துறையில் வாய்ப்பு கொடுப்பதற்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளச்சொல்லி பாலியல் ரீதியாக கொடுமை படுத்தினார்கள் என்று பல திரையுலக பிரபலங்கள்மீது நடிகை ஒருவர் பரபரப்பாக புகார் கூறினார் அரைநிர்வாண போராட்டம் நடத்தி அகில இந்தியாவையே கிறுகிறுக்கவும் செய்தார் அந்த நடிகை.

அவரை அரைமணிநேரம், ஒரு மணிநேரம் என்று பேட்டி எடுத்து எக்ஸ்குளுவ்சிவ் போட்டு ஒளிபரப்பு செய்யாத செய்தி தொலைக்காட்சிகளே தமிழகத்தில் கிடையாது என்று சொல்லலாம். முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரின் அந்தரங்கத்தை வீடியோ ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவேன் என சீறினார் அந்த நடிகை..

காமுகர்கள் அனைவரும் கம்பி எண்ணவேண்டும் என்று பாலியல் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். ஆனால் இரு வாரங்களில் மேற்படி நடிகை கப்சிப் ஆகிப்போனார். நடிகையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சீறிய நடிகர்களும் இயக்குநர்களும் ஊமைகளாகிப்போனார்கள். கடைசியில் இப்போது பல படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக்கொண்டு நடிகை நினைத்ததை சாதித்துத்கொண்டார் என்று அந்த எபிசோடே முடிகிறது. இறுதிவரை காவல்துறை வழியாக சட்டபூர்வ நடவடிக்கையை யாருமே தொடவுமில்லை.. கேட்கவுமில்லை…

அதாவது பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக வித்தை காட்டுபவர் எந்நாளும் இரண்டையும் உண்மையான சண்டைக்கு விடவேமாட்டார். அப்படி சண்டை விட்டால் இரண்டுமே அடித்துக்கொண்டு இறந்துபோய்விடும். மறுபடியும் பாம்புக்கும் கீரிக்கும் வித்தை ஆசாமி எங்கே போவார் அதனால் கடைசி வரைக்கும் இதோ விடப்போறேன், அதோ விடப்போறேன் என்ற உதார்தான் அவரிடத்தில் மிஞ்சும்.

அதே மாதிரிதான் இந்த மீடூ விவகாரத்திலும்.. சட்டபூர்வ நடவடிக்கை என்ற இடத்தில் ஆரம்பிக்காதவரை, தெருவோர வித்தைக்காரர் மாதிரி, கீரியையும் பாம்பையும் இதோ சண்டைக்கு விடப்போறேன்.. எல்லாரும் ஜோரா ஒருமுறை கை தட்டுங்க என்ற டயலாக்கை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்