மீ டூ பாலியல் புகார்கள்: விசாரிக்க குழு அமைக்கப்படும்!: நடிகர் விஷால்

திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூவர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ட்விட்டர் இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட  தான் #MeToo என்ற ஹேஷ்டேக் பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்த்திரைப்பட பாடகி சின்மயி, தனக்கு அனுப்பப்படும் பாலியல் புகார்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பாடலாசிரியர் வைரமுத்து நடிகர் ராதாரவி ஆகியோர் மீது பலரும் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வடபழனியில் சண்டகோழி-2 படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், “பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயிகூறிய புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். வணிக ரீதியான ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும். திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூவர் கொண்ட குழு அமைக்கப்படும்.

ட்விட்டரில் கருத்து தெரிவித்தால்தான் குரல் கொடுக்கிறோம் என்று அர்த்தமல்ல. அமலாபாலுக்கு பாலியல் துன்புறத்தால் ஏற்பட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தேன். நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சொன்னால் நடக்க வேண்டியது நடக்கும்.

சின்மயி விவகாரத்தில் அவர் உடனடியாக சொல்லி இருக்க வேண்டும் யாருக்காகவும் சின்மயி அச்சப்பட்டிருக்க கூடாது; பிரச்சனைகளை விரைவாக வெளியே சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விஷால் தெரிவித்தார்.