#MeToo புகார்: முதல் நபராக மன்னிப்பு கேட்ட தமிழ் நடிகர் டி.எம்.கார்த்திக்  

#MeToo ட்விட்டர் பதிவுகள் மூலம் பலர் மீதும் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், புகாருக்கு உள்ளான தமிழ் காமெடி நடிகர் டி.எம்.கார்த்திக் முதல் நபராக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவில் #MeToo இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரசியல், திரைத்துறை, ஊடகம் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த வி.ஜ.பி.க்கள் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

புகாருக்கு உள்ளானவர்கள் பெரும்பாலோர் மவுனம் காக்கிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்து, “காலம் பதில் சொல்லும்” என்று மேம்போக்காக தெரிவித்துள்ளார். இயக்குநர் சுசி கணேசன், தன் மீது குற்றம்சாட்டியவர் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், புகாருக்கு உள்ளான தமிழ் நடிகர் டி.எம்.கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

‘என்றென்றும் புன்னகை’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் இவர்.

இவர் மீதும் தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் டி.எம். கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.

அந்த பதிவில், “சமீப நாட்களாக #MeToo இயக்கத்தின் கீழ் நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. என்னுடனான சந்திப்பின்போது யாரேனும் அசவுகரியமாக உணர்ந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோரவே இந்தப் பதிவை பதிகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்விலும், தொழில்ரீதியான தொடர்புகளிலும் நான் எப்போதுமே பெண்களிடம் மரியாதையாகவே நடந்து வருகிறேன். . என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் மனம் விரும்பியே இருந்தனர் என நம்பினேன். அதுதான் தவறு. இப்போது நான் உணர்கிறேன். சில நேரங்களில் நான் அத்துமீறியிருக்கலாம். ஆனால், எந்த ஒரு பெண்ணையும் அசவுகரியமாக உணரவைக்க வேண்டும் என நான் திட்டமிட்டது கிடையாது.

நான் அணுகும் பெண்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அவர்களிடம் இருந்து விலகிவிடுவேன். ஆனாலும் என்னால் யாரேனும் வேதனைப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  இதை நான் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அல்லது விளைவுகளைத் தவிர்க்கவோ கூறவில்லை.

டி.எம். கார்த்திக்

இந்த #MeToo இயக்கம், என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்ள ஒரு உந்துதலாக உள்ளது. பல வருடங்களாக  பல பெண்களுடன் நான் வெற்றிகரமாகப் பணியாற்றியிருக்கிறேன். பெண்ணியத்துக்காகவும் தோள் கொடுத்திருக்கிறேன்.

என்னால் எப்போதும் யாரும் அசவுகரியமாக உணர்ந்ததில்லை. அப்படி எதிர்மறை விமர்சனங்களை நான் சந்தித்தது கிடையாது. ஆனால், சில பெண்கள் அசவுகரியத்தை வெளிக்காட்டாமல் என்னைச் சகித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன்.  அதை அன்றே புரிந்திருக்க வேண்டும்.

எனது தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இல்லை வேறு ஏதாவது ஒரு தளத்தில் நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கும் நான் தயாராக உள்ளேன். எதிர்காலத்தில் என்னைத் திருத்திக்கொள்ள நான் முற்படுகிறேன். #Metoo இயக்கத்துக்கு எனது முழு ஆதரவைத் தெரிவிப்பதோடு, இந்த உலகம் பெண்களுக்கு  பாதுகாப்பானதாக அமைய துணை நிற்பேன் என உறுதி அளிக்கிறேன்” என  டி.எம். கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.