இறைச்சி – அமெரிக்காவில் தட்டுப்பாடு; ஆனால் சீனாவுக்கு அதிக ஏற்றுமதி!

சிகாகோ: அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு, இந்த இக்கட்டான கொரோனா நேரத்திலும் தொடர்ந்து இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாவதால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று ஏற்பட்டு, இறப்பு நேரிட்டிருந்தாலும், இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அதேசமயம், சீனாவிற்கான ஏற்றுமதி நடவடிக்கைகளும் அதிகளவில் தொடர்கின்றன.

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளை, கடந்த 1950ம் ஆண்டின் அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தின் மூலம் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இயங்க வைத்துள்ளதற்கு, அந்நாட்டின் பலதரப்பார்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிபர் தேவையில்லாமல், இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

சீனாவில், பன்றி தொடர்பான ஒரு நோய் பரவி, அந்நாட்டு இறைச்சி மந்தைகள் பெரும் அழிவை சந்தித்த நிலையில், இறைச்சி தேவைக்கு, பல உலக நாடுகளையே சார்ந்துள்ளது சீனா. குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து அதிகளவில் இறைச்சியை இறக்குமதி செய்துகொள்கிறது. அதேசமயம், அந்த இறைச்சிக்கு சீனர்கள் அதிக விலையையும் கொடுத்து வருகின்றனர்.