கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் கேலி செய்தன: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் தம்மை கேலி செய்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிர்பலிகளும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வேலை இழப்பு, பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரங்களில் மத்திய அரசு செயல்பாடுகள், அதனால் ஏற்பட்டுள்ள தோல்விகள், நெருக்கடிகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந் நிலையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தர முடியாது. வெளிப்படையான ஒன்றாக தான் இப்போது உள்ளது.

கொரோனா காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்று நான் நாட்டை எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் சொல்வதைக் கேட்க வேண்டாம். இன்று நான் சொல்கிறேன் நம் நாடு வேலைகளை வழங்க முடியாது. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆறு, ஏழு மாதங்கள் காத்திருக்கவும்.

90% வேலைவாய்ப்பு அமைப்புசாரா துறையில் உள்ளது. சிறு தொழில்கள், விவசாயிகள் ஆகியவற்றை பிரதமர் மோடி அழித்தார். நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைவதை நீங்கள் காண்பீர்கள். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) தடைக்காலத்திற்குப் பிறகு அழிக்கப்படும் என்றார்.