மதுரை:

‘‘ஊடகங்கள் எங்களை கேள்வி கேட்டு மடக்க பார்க்கின்றன’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தினகரன் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார். 10 ஆண்டுகள் கட்சியில் இல்லாத தினகரன் எங்களை எப்படி நிர்வகிக்க முடியும். தினகரன் என்னை முதல்வராக்கவில்லை. தன்னைத் தானே ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்து கொண்டார்.

நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். கட்சிக்கும்ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன். சசிகலா என்னை முதல்வராக ஆக்கவில்லை. ஒட்டு மொத்த எம்.எல்.ஏக்களே என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கோவையில் கவர்னர் ஆய்வு செய்தார் என்பதே தவறு. கவர்னரின் ஆய்வு திட்ட மிடப்பட்டது இல்லை . திட்டங்களை தெரிந்து கொள்வதற்காகவே அதிகாரிகளை சந்தித்துள்ளார். கவர்னர் ஆய்வு குறித்து எதிர்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன. மாநில அரசு சிறப்பாக செயல்படுவதாக கவர்னர் பாராட்டி பேசி உள்ளார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இருந்த இடத்தில் சோதனை நடத்தப்படவில்லை. கோயிலாக கருதும் ஜெ., இல்லத்தை நாங்கள் அரசு நினைவிடமாக்க முடிவு செய்துள்ளோம். வருமான வரி சோதனையில் மாநில அரசு பங்கு இல்லை. சில பேர் செய்த தவறின் காரணமாக தொண்டர்களுக்கும் கழகத்திற்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஊடகங்கள் எங்களை கேள்வி கேட்டு மடக்க பார்க்கின்றன’’ என்றார்.