நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு (தமிழகத்துக்கு) மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு, வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், நாளை மறுநாள் முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நடைபெறும். நாளை மறுநாள் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். பல் மருத்துவப் படிப்பில் சேர செப்.10 வரை கலந்தாய்வு நடைபெறும்” என்றும் தெரிவித்தார். மேலும், “தமிழகத்தில் 3,536 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.