புதுடெல்லி:

அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவித் தொகை வழங்குவது இல்லை என்ற புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்காமல் உள்ளனர். சில கல்லூரிகளில் மிகவும் குறைவான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் உதவித் தொகை தருவதில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கிறது.

கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.4 ஆயிரம் மட்டுமே பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையாக தரப்பட்டது. ரூ. 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை உதவித் தொகையை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டது.

கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்தும் புகார் வந்துள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்காமல், ஆண்டுதோறும் ரூ.3 கோடிக்கு மேல் மிச்சப்படுத்துவதாக தெரிகிறது.

தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகையை ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ. 23,500-ஆக உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.