a

சென்னை :
‘நுழைவு தேர்வு பிரச்னைக்கு தீர்வுகாண, அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். .
இதுகுறித்த அவரது அறிக்கை:
“’அ.தி.மு.க., அரசு மீண்டும் அமைந்தவுடன், மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல், மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதல்வர்
ஜெயலலிதா தற்போது அறிவித்திருக்கிறார்.
இதற்காக, இப்போதே, ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கலாமே.. அதை யார் தடுத்தது?
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எல்லாரையும் ஏமாற்றுகிற ஜெயலலிதா, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக, தகுந்த தண்டனையை, மாணவர்களிடம் இருந்தும், பெற்றோர்களிடம் இருந்தும் பெற வேண்டாமா?
உச்ச நீதிமன்றத்தில், நுழைவுத் தேர்வு பற்றிய வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, மற்ற மாநிலங்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், எழுத்துப்பூர்வமாக தங்கள் எதிர்ப்பை தாக்கல் செய்தனர்.தமிழக அரசு சார்பில், எழுத்துப்பூர்வ எதிர்ப்பைத் தாக்கல் செய்யாதது ஏன்?
இந்த முக்கியமான வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரோடு விவாதித்து, தமிழகத்தின் எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக, உச்ச நீதிமன்றத்திலே தெரிவித்திருக்க வேண்டாமா?
நுழைவுத் தேர்வை ரத்துசெய்ய, உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்யாத ஜெயலலிதா, இப்போது தேர்தல் என்றதும், நுழைவுத் தேர்வைப் பற்றி ஏதேதோ பேசி, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை நிரூபித்திருக்கிறார்” என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.