சேலம்: மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது வழக்கு  லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ளது சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில்,  நோயாளிகளுக்கு மருந்து கொள்முதல் மற்றும் உபகரணங்கள் வாங்கியதில்  பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2013-2014-ம் ஆண்டுகளில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் டீனாக இருந்தவர் கார்த்திகேயன். அவரது மேற்பார்வையில், மருத்துவமனைக்கு,  சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் மூலம்   சில உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

அவிசாரணையில்,   சேலம் அரசு  மருத்துவமனை  அறுவை சிகிச்சை அரங்கில் உபயோகப்படுத்தும் உபகரனம்  விலை ரூ2.5 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரூ.9.50 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரு உபகரணத்தில் மட்டும், ரூ.7 லட்சம் முறைகேடு செய்துள்ளது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல,  மயக்கமருந்து செலுத்தும் உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தமுறைகேட்டின்  மொத்த மதிப்பு  ரூ.12, 48,  350 என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சுமத்தி உள்ளது.

இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டீன் கார்த்திகேயன், அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தனியார் மருந்து நிறுவனங்கள் என 38 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருப்பதாகவும் அதைத்தொடர்ந்து, அப்போதைய டீன்   கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் இளங்கோவன், கிடங்கு கண்காணிப்பாளர் தண்டபாணி, கொள் முதல் பிரிவு உதவியாளர் அசோக்ராஜ் மற்றும் மருந்து சப்ளை செய்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில்  கார்த்திகேயன், இளங்கோவன் ஆகியோர் பணி ஓய்வு பெற்று விட்டனர். கிடங்குப்பிரிவு கண்காணிப்பாளர் தண்டபாணி மட்டும் தற்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் கண்காணிப்பாளராக டெபுடேஷனில் பணியாற்றி வருகிறார். அசோக்ராஜ் என்பவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.