டில்லி

ந்த ஆண்டின் அதாவது  2019-ம் ஆண்டின் மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளன. அதில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர்  ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராணவாயு அளவுக்கேற்ப  மனித உடலில் உள்ள செல்கள் எப்படித் தகவமைத்துக் கொள்கின்றன என்பதைக் கண்டறிந்ததற்கு  மேலும் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பைக் கண்டறிந்ததற்காக இந்த நோபல் பரிசு  வழங்கப்படுகிறது.

இந்த மூவரின் கண்டுபிடிப்புகள் மூலம் ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது.  இந்த மூவரும் நோபல் பரிசுத் தொகையான ரூ.6.45 கோடியைச் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இயற்பியல் துறைக்கான நோபல்  பரிசு நாளையும் வேதியல் துறைக்கு நாளை மறுநாளும் அதன் பிறகு வரும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கும்  ஆன நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.