புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை கையாண்ட விதம் குறித்து மோடி அரசை விமர்சித்துள்ளன மருத்துவ தொழில்முறை சங்கங்கள்.
கூட்டு அறிக்கையை கடந்த 25ம் தேதி(மே) பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பித்த அந்த சங்கங்கள், எதிர்காலத்திற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளன.
அந்தக் குழுக்களில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர்கள், எய்ம்ஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுநிலை கல்வி நிறுவனம் ஆகியவற்றின் தற்போதைய மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் ஆகியோர் அடக்கம்.
இந்த நிபுணர்கள், இந்தியப் பொது சுகாதார சங்கம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்திற்கான இந்திய சங்கம் மற்றும் தொற்றுநோய்களுக்கான இந்திய சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக உள்ளனர்.
நீண்டகால ஊரடங்கு மற்றும் பொருத்தமற்ற வியூகங்கள் எந்தப் பயனையும் தராது என்றும், அதனால் இந்தியா அதிக விலையைக் கொடுக்க வேண்டுமென்றும் அந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.