சென்னை:
ரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளன. ஆனால் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு, தமிழக கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும். அடுத்த ஓரிரு நாட்களுக்குள் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் கவர்னர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதை எளிதாக எடுத்துக்கொண்டு நடப்பாண்டில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படாது.

அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். எனவே எந்தெந்த வகைகளில் எல்லாம் கவர்னருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகு தான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.