தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!!

சென்னை,

நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதை தொடர்ந்து சென்னையில் சென்ட்ரல் அருகே போராட்டத்தில் குதித்தனர்  பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள்.

இதன் காரணமாக சுமார் 4 மணி நேரம் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

பேச்சு வார்த்தையை தொடர்ந்து, மருத்துவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து போராட்டம் இரவு 8மணி அளவில் விலக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  இன்று காலை முதல் மருத்துவகல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள்,  மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு, மற்றும் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களுடன்,   மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் மற்றும்  மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே  அமல்படுத்த கோரியுள்ளனர்.

இதே போல் கோவையிலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.