மருத்துவ படிப்பு: மாநில உரிமை நிலை நாட்டப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை,

ருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில உரிமை நிலை நாட்டப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை மருத்துவ கல்லூரியின் தோரண நுழைவு வாயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நுழைவு வாயிலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும்,  சென்னையை அடுத்து, மதுரை, திருநெல்வேலியிலும் அனைத்து வசதிகளுடன் மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்திற்கு 85 சதவீதமும், மத்திய பாட திட்டத்திற்கு 15 சதவீதமும் தமிழக அரசு பொதுநல நோக்கோடு ஒதுக்கியுள்ளதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் மாநில உரிமை நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

அதைத்தொடர்து மருத்துவ மாணவர்களின் விடுதி கட்டிடத்தை அமைச்சர் சுற்றி பார்த்தார்.