கொச்சி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு, கேரளாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று அந்நாட்டிற்கு சென்றுள்ளது.
தங்கள் நாட்டின் கொரோனா எதிர்ப்புப் போருக்கு உதவிசெய்ய வ‍ேண்டுமென்று இந்திய அரசிடம், ஐக்கிய அரபு அமீரக அரசு கேட்டுக்கொண்டதை இந்திய அரசு உடனே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ள 88 மருத்துவக் குழுவினரில், 38 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக் குழுமம்தான், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கோரிக்கையை முதன்முதலாக ஏற்றுக்கொண்ட குழு என்று கூறப்படுகிறது.
இந்தக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்தான் அந்தக் குழுவில் பிரதானம். இதற்கடுத்து, ஆஸ்டர் மெட்சிட்டி(கொச்சி) மற்றும் ஆஸ்டர் எம்ஐஎம்எஸ் ஹாஸ்பிடல்(கோழிக்கோடு) போன்ற குழுமங்களைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.
இந்தக் குழுவில் இடம்பெற்றவர்களில் பலர் ஏற்கனவே அந்நாட்டில் பணியாற்றியவர்கள். பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், இதர காரணங்களுக்காகவும் இந்தியாவில் விடுமுறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் விமானம் ஏப்ரல் 9ம் தேதி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது.