மீனாட்சி கோவில் தீ விபத்து: பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரையும் இடிந்து விழுந்தது

மதுரை,

தீ விபத்து நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தூண்கள், மேற்கூரைகள் கீரல் ஏற்பட்டு இடிந்த விழும் நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட, மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு பிடித்த பயங்கர தீ விபத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. மேலும், தீயின் கோர தாக்குதலால் அந்த பகுதியில் இருந்த 1000 கால் மண்டபம் மற்றும் கோவிலின் மேற்கூரை, தூண்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் மேல்தளம் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக அந்த பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தீ விபத்து ஏற்பட்ட பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரையின் ஒரு பகுதி  நேற்று இரவு இடிந்து விழுந்தது.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.