மேகதாது விவகாரம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைமைகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில்  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மேகதாது அணை விவகாரம், ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேகதாதுவில் காவிரிக்கு குறுக்கே அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும் மற்றும் கஜா புயல் பாதிப்பிக்கு உடனடியாக நிவாரணம் வழங்கு வதுடன் விவசாய கடன் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது. புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அண்மையில் டிடிவி அணியில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். மேலும்,  திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.